ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதித்த 101 வயது மூதாட்டி குணமடைந்து அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

மாட்ரிட்:


ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதித்த 101 வயது மூதாட்டி குணமடைந்து அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஸ்பெயினிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. ஸ்பெயினில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 10,935 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களில் 95 சதவீதத்தினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்த 101 வயது மூதாட்டி, அதிலிருந்து குணமடைந்து அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.


ஸ்பெயினின் ஹூஸ்கா பகுதியில் உள்ள மருத்துவமனையில் என்கார்னாசியான் புய்சான் என்னும் மூதாட்டி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையிலேயே கடந்த மார்ச் 15ம் தேதி தனது 101வது பிறந்தநாளையும் கொண்டாடினார். தொடர் சிகிச்சை மேற்கொண்ட மூதாட்டி, கொரோனாவை வென்று முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

இது குறித்து அவரது மகள் கூறுகையில், டாக்டர், நர்ஸ் மற்றும் எனது அம்மாவை குணமாக்க போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நன்றியை தவிர அவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அனைவரும் சிறப்பாக கவனித்து கொண்டனர். நோய் தொற்றில் இருக்கும் அனைவருக்கும் என் அம்மா மீண்டது நம்பிக்கையை கொடுக்க வேண்டும். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நோயை எதிர்த்து போராடினால் குணமாக முடியும். இவ்வாறு அவர் கூறினார்.